விஜய் மீது வழக்கு பதிவு செய்ய தயங்குவது ஏன்?* தி.மு.க.வுக்கும், த.வெ.கவுக்கும் ரகசிய தொடர்பா? திருமாவளவன் சரமாரி கேள்வி…!
பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று (அக்.2) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மகாத்மா காந்தியின் பிறந்த தினம் இன்று. காமராஜரின் நினைவு நாள் இன்று. இந்த இரு பெரும் தலைவர்களும் மது வுக்கு எதிரானவர்கள். அவர்களது வழியில் பூரண மதுவிலக்கை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் 41 பேர் உயிரிழப்புக்கு மது அருந்தியவர்களும் காரணம். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக, அடுத்தவர்கள் மீது பழி போடுவதற்காக, குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதற்காக விஜய் முயற்சிக்கிறார். விஜய் எவ்வளவு ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார், அல்லது ஆபத்தானவர்களிடம் சிக்கி இருக்கிறார் என்பது கவலை அளிக்கிறது. இதுபோன்ற சக்திகளிடம் தமிழக மக்கள் சிக்கிக் கொண்டால் என்ன ஆகுமோ என்கின்ற அச்சம் ஏற்படுகிறது.கரூர் உயிரிழப்பில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறை, ஏன் விஜய் மீது வழக்கு பதிவு செய்யவில்லை? தமிழ்நாடு அரசும், காவல்துறையும் அச்சப்படுகிறதா?. தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய் கூறி வந்த நிலையில், அவரை பாதுகாக்க பாஜக முன்வருகிறது. இதிலிருந்து விஜயின் சாயம் வெளுத்துப் போய்விட்டது. விஜயிடம் இருந்து தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொள்வார்கள்.
தனது கொள்கை எதிரி பாஜக என்று விஜய்க்கு, பாஜக வினர் சொல்லிக் கொடுக்கிறார்கள். விஜய் சுயமாக சிந்தித்தால், இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன். விஜய்யை சுற்றி இருக்கக்கூடிய அனைவரும் பாஜக பயிற்சி பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள். நிர்மல் குமார் பாஜகவில் இருந்து வெளியேறி விஜய்யுடன் சேர்ந்தது எதற்காக? பாஜக மதவாத கட்சி என்று அவர் என்றைக்காவது சொல்லி இருக்கிறாரா? எதற்காக அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வர வேண்டும். அவர் அப்பேர்பட்ட தியாகியா என்ன? ரஜினியை தனியாக கட்சி தொடங்குவதற்கு ஆலோசனை கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் பின்னணியில் இயங்கக்கூடிய விஜயின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய் எப்போதும் இணைய மாட்டார். அவரது நோக்கம் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளையும் சிறுபான்மையினருடைய வாக்குகளையும் பிரிக்க வேண்டும் என்பது தான். பாஜக, ஆர்எஸ்எஸ் தூண்டுபேரில பேரில் விஜய் செயல்படுகிறார். தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் தயங்குவது ஏன்?தவெகவுக்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா? என சந்தேகம் எழுகிறது.இது விபத்து என்றால் மற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் காவல்துறை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.