திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஸ்கேன் டெக்னீசியனாக பணியாற்றி வருபவர் வில்லியம் சார்லஸ் (வயது 44). இவர் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி கிரிஜா என்பவர் தனது உறவினர் ஒருவருக்கு ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்து உடனே அவருக்கு ஸ்கேன் எடுக்குமாறு கூறியுள்ளார். அதற்கு வில்லியம் சார்லஸ், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் காத்திருக்கின்றனர். வரிசைப்படி தான் ஸ்கேன் எடுக்க முடியும், ஆகவே வரிசையில் வாருங்கள் என கறாராக கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிரிஜா, அரசு ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு காலால் எட்டி உதைத்தார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வில்லியம் சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசார் கிரிஜா மீது பொது இடத்தில் ஆபாசமாக திட்டுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட கிரிஜா, இதேபோல திருச்சி மாநகர காவலர்கள் சிலரையும் சட்டக் கல்லூரி மாணவி என்ற போர்வையில் மிரட்டுவதாக புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.