என் பெயரை விஜய் சொன்னவுடன் காலணி வீசப்பட்டதாக சொல்வது தவறு…- செந்தில் பாலாஜி விளக்கம்…! (வீடியோ இணைப்பு)
கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த துயர சம்பவம் தொடர்பாக தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ( 01-10-2025) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: – கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த துயர சம்பவம் கொடுமையானது. தமிழ்நாட்டில் எங்கும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கரூர் துயர சம்பவத்தை அரசியலாக பார்க்காமல் மனித நேயத்துடன் அணுக வேண்டும். ஒன்றரை வயது குழந்தை இறந்துள்ளது, இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன். த.வெ.க. கேட்ட இடங்களில் அதிகம் பேர் நிற்க கூடிய இடம் வேலுசாமிபுரம் தான். எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்து இடத்தை தேர்வு செய்வது கட்சிகளின் பணி. லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7 ஆயிரம் பேர் தான் நிற்க முடியும். கூட்டத்திற்கு வருவபவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்ய வேண்டும். தொண்டர்களுக்கு தேவையான குடிநீரை அளிக்க வேண்டியது கட்சிகளின் பொறுப்பு. த.வெ.க. பிரசாரம் நடந்த இடத்தில் ஒரு காலி குடிநீர் பாட்டிலையாவது பார்த்தீர்களா? . லைட் ஹவுஸ் கார்னரில் அனுமதி கொடுத்திருந்தால் மாநகர் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கும். விஜய் பிரசாரம் 4 மணிக்கு நடந்திருந்தால் கூட இந்த பெருந்துயரம் நடந்திருக்காது. விஜய் குறித்த நேரத்தில் வந்திருக்க வேண்டும். விஜய் பேசிய 6-வது நிமிடத்தில் தான் செருப்பு வந்து விழுந்துள்ளது. என்னை பற்றி விஜய் 16-வது நிமிடத்தில் தான் பேசினார். என் பெயரை விஜய் சொன்ன பிறகுதான் செருப்பு வீசப்பட்டதாக தவறான தகவலை பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.