கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில், தவெக பொது செயலாளர் ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் சார்பில் பிரசாரக் கூட்டம் வேலுச்சாமி புரத்தில் நடந்தது. இதில் ஏற்பட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக விசாரித்த போலீசார் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், மாவட்டச் செயலாளர் மதியழகன் மீது வழக்கு பதிந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில், பொதுச் செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, விஜய் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் தெற்கு நகர பொருளாளர் பவுன்ராஜை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். வன்முறையை தூண்டி கிளர்ச்சியை உண்டாக்கும் எண்ணத்தோடு சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜூனா மீது சென்னை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.