Rock Fort Times
Online News

எந்தக் கொம்பனாலும் திமுகவை அசைக்க முடியாது: 2026 தேர்தலிலும் வெற்றி வாகை சூடுவோம்…* கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

கரூரில் இன்று(17-09-2025) திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட கழக செயலாளர் செந்தில் பாலாஜி வரவேற்று பேசினார். கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே. என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, கனிமொழி கருணாநிதி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதனை தொடர்ந்து திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இது கரூர் அல்ல. திமுக ஊர்.கொட்டும் மழையில்தான் இதே நாளில் ராபின்சன் பூங்காவில் திமுகவை அண்ணா தொடங்கி வைத்தார். கொட்டும் மழையில் தொடங்கி வைத்த இந்த கழகம் 75 ஆண்டுகள் அல்ல. 100 ஆண்டுகளை நாம் காணப் போகிறோம். திமுக வரலாற்றிலேயே இப்படி ஒரு பிரமாண்டமான முப்பெரும் விழா நடந்திருக்காது. மழை பெய்தாலும் குடை பிடித்துக் கொண்டு, நாற்காலியை பிடித்துக் கொண்டு விழாவை நீங்கள் நடத்திக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. 2019 முதல் எதிர்கொண்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்திருக்கிறோம். சாதாரண வெற்றி அல்ல. எதிரிகளை கலங்கடிக்கக் கூடிய வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த வெற்றிப் பயணம் தமிழக மக்கள் ஆதரவோடு 2026 தேர்தலிலும் தொடரும். பெரியார், அண்ணா, கருணாநிதி வழியில் நின்று உண்மையாக உழைக்கிறோம். தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் திராவிட மாடல் ஆட்சி 2.0 அமையும். நாட்டிலேயே முதலில் ஆட்சியை பிடித்த மாநில கட்சி திமுக. மிரட்டலுக்கு பயப்படும் கட்சி திமுக அல்ல. ஈராயிரம் ஆண்டுகளாக காவி கூட்டத்துடன் போராடி வருகிறோம். திமுகவுக்கு மாற்று,மாற்றம் என்றவர்கள் எல்லாம் மறைந்து போனார்கள். திமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது இவ்வாறு அவர் கூறினார். விழாவில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்