Rock Fort Times
Online News

கரூரில் இன்று (செப்.17) திமுக முப்பெரும் விழா: கனிமொழி எம்பி உள்பட 7 பேருக்கு விருது வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

திமுக சார்பில், அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று (17-09-2025) நடக்கிறது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணி அளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், கலெக்டர் சரவணன் உள்பட அதிகாரிகள் மற்றும் திமுகவினர் வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு முடிந்த பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் காலை 10.45 மணிக்கு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதிக்கு வருகிறார். அங்கு பெரியாரின் 147-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். திருச்சியில் நடைபெறும் நிகழ்ச்சியை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் கரூர் செல்கிறார். அங்கு திமுக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். விழாவில் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருதும், பாளையங்கோட்டை நகர மன்ற முன்னாள் தலைவர் சீதாராமனுக்கு அண்ணா விருதும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருதும், மறைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்திற்கு பேராசிரியர் விருதும், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு மு.க.ஸ்டாலின் விருதும், பத்திரிகையாளர் பன்னீர் செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருதினையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். முப்பெரும் விழா நடைபெறும் இடத்தின் நுழைவுவாயிலானது கோட்டைபோல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அங்கு 1 லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. கரூர் மாநகர் முழுவதும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் திமுகவின் கொடிகம்பங்கள் கரூரில் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ளது. திமுகவின் முப்பெரும் விழாவையொட்டி கரூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்