அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும் என்று ‘கெடு’ விதித்திருந்தார். இதனை ஏற்க மறுத்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வசம் இருந்த கட்சிப் பதவிகளை பறித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களின் பதவிகளும் பறிக்கப்பட்டன. இந்நிலையில் ஆன்மீகப் பயணம் என்று கூறிக்கொண்டு டெல்லி சென்ற கே.ஏ.செங்கோட்டையன், அங்கு மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பு அவசியம் என வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார். இந்தநிலையில் இவரைப்போல டி.டி.வி.தினகரனும் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செங்கோட்டையனுக்கு முன்னதாகவே டி.டி.வி.தினகரன் அமித்ஷாவை சந்திக்கும் வாய்ப்பு உருவானதாகவும், ஆனால் அது தள்ளிப்போனதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இன்று (10-09-2025) அல்லது நாளை அந்த சந்திப்பு நடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரைத் தொடர்ந்து சசிகலாவும் சந்திப்பார் என கூறப்படுகிறது.

Comments are closed.