நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்றது. கிறிஸ்தவ ஆலயங்களுக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய ‘பசிலிக்கா’ என்ற அந்தஸ்தை பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டு செல்கிறாா்கள். அவ்வகையில் இந்த ஆண்டின் திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார மாதா பெரிய தேர் பவனி நேற்று இரவு நடந்தது. தேர் பவனியையொட்டி தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் நடந்தது. தொடர்ந்து புதுவை- கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாதா தேருக்கு முன்பாக புனித மிக்கேல் சம்மனசு, புனித சூசையப்பர், புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், அமலோர்பவமாதா, புனித உத்திரிய மாதா ஆகிய தேர்கள் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் அணிவகுத்து சென்றன. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வேளாங்கண்ணி பேராலயத்தை சுற்றி அன்னையின் பெரிய தேர் மற்றும் சிறிய தேர்கள் வலம் வந்தன. அப்போது தேரை பின் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள் என எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பேராலயத்தை சுற்றி தேர் வலம் வந்த போது மக்கள் தேர் மீது பூக்களைத் தூவி ஜெபித்தனர். தேர் பவனி பேராலயம் முன் வந்து சேர்ந்ததும் பிரார்த்தனை செய்யப்பட்டது. விழாவில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனா். இன்று(செப்டம்பர் 8) மாதா பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. பக்தர்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
Comments are closed.