மறைந்த த.மா.கா. நிறுவனர் ஜி.கே.மூப்பனாரின் 24-வது நினைவு தினம் இன்று(30-08-2025) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய மகனும், த.மா.கா. தலைவருமான ஜி.கே.வாசன் தற்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருவதால், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாள் நிகழ்ச்சியில், பா.ஜ.க. தரப்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. – அ.தி.மு.க. கூட்டணி அமைத்திருந்தன. ஆனால், அப்போதைய தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கருத்தால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. அக்கூட்டணியில் இருந்து வெளியே வந்தது. அதன்பிறகு, தமிழக பா.ஜ.க. பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்ட பிறகே, தற்போது மீண்டும் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் எலியும், பூனையுமாக இருந்து வந்த நிலையில், ஜி.கே.மூப்பனார் நினைவு நாள் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்திருந்தனர். ஜி.கே.மூப்பனார் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்த சென்றபோதும் இரண்டு பேரும் ஒன்றாகவே சென்றனர். இது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணையுமா? என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீசும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இணைய முடிவு செய்துவிட்டதா? என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மொத்தத்தில், இது ஜி.கே.மூப்பனாரின் நினைவு நாள் மேடை என்றாலும், அரசியல் மேடையாகவே பார்க்கப்படுகிறது.
Comments are closed.