வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவித்ரா (வயது 25). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மாயமானார். இதுதொடர்பாக பழனி கொடுத்த புகாரின்பேரில், அந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமது (26) என்பவரை பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்காக அழைத்துச்சென்றார். அப்போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஷமீல்அகமது சிகிச்சை பலனின்றி ஜூன் 26-ந் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆம்பூரில் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஜூன் 27-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஷமில்அகமது மரணத்துக்கு காரணமான போலீசாரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பயங்கர கலவரம் வெடித்தது. இதில் 15 பெண் போலீசார் உள்பட 91 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், 7 போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. 4 மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கலவரத்தில் தொடர்புடைய 191 பேர் மீது போலீசார் 12 பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வேலூர், கடலூர், சேலம் ஆகிய சிறைகளில் அடைத்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த 26-ந் தேதி பகல் 12 மணியளவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஆம்பூர் கலவரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு 28-ந் தேதி (அதாவது இன்று) வழங்கப்படும் என நீதிபதி மீனாகுமாரி கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்தார். அதன்படி, இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஆம்பூர் கலவரம் தொடர்பாக பதிவான வழக்குகளில் இருந்து 161 பேரை விடுதலை செய்து நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார். 7 கட்டமாக பதியப்பட்ட வழக்குகளில் 6 கட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 161 ( இறந்தவர் உட்பட) பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கலவரத்தின்போது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாஷாவின் சொத்துக்களை பறிமுதல் செய்து நஷ்டத்தை ஈடுசெய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments are closed.