“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் ஆக.23ம் தேதி முதல் இன்று 25-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றி வருகிறார். இன்று( ஆக.25) மாலை மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தில் 12 மாத காலம் யாரும் பணிக்கு செல்ல இயலாத நிலை. அந்த காலகட்டத்தில் மக்கள் பாதிப்படைய கூடாது என்ற நோக்கில் விலையில்லா அரிசி, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றை ரேஷன் கடையில் வழங்கிய ஒரே அரசு அண்ணா திமுக அரசு. கொரோனாவால் மாணவர்கள் படிப்பு பாதிப்படைய கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தினோம். அதனால் பலரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கு ஆல்பாஸ் வழங்கினோம். தற்போது தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது. அதனால் கல்வி தரம் குறைந்து விட்டது. அதனால் 207 அரசு பள்ளிகள் மூடும் நிலை ஏற்பட்டு விட்டது. ஏழை மாணவர்கள் படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற நோக்கில் தான் அதிமுக அரசு கூடுதல் பள்ளிகளை திறந்தது. ஆனால் ஆளும் திமுக அரசு பள்ளிகளுக்கு மூடு விழா நடத்துகிறது. கடந்தாண்டை விட இவ்வாண்டு தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. ஆனால் அரசு பள்ளிகளில் 1,40,000 மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் போதை கலாச்சாரம் ஒழிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் வரவேற்புரை ஆற்றினார். பிரச்சாரக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், வளர்மதி மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.