திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.1, 000 கோடி வழங்கியது அதிமுக அரசுதான்… எடப்பாடி பழனிச்சாமி பேச்சு…!
“மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் இன்று ஆகஸ்ட் 23 முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் கொண்டு 9 சட்டமன்ற தொகுதிகளில் சிறப்புரையாற்றுகிறார். அந்தவகையில் திருச்சிக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் பேசினார். அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி நிதி வழங்கிய அரசு அதிமுக அரசு. இந்தியாவிலேயே குப்பைக்கு வரி போட்ட அரசு திமுக அரசு தான். விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்களுக்காக திமுக ஆட்சி செய்யவில்லை. அவர்கள் குடும்பத்திற்காக தான் ஆட்சி செய்து வருகிறார். அதிமுக ஆட்சியில் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்பட்டது. கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க காரணம் அதிமுக இட்ட அடித்தளம் தான். ஓர் ஆண்டில் 11 அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வந்து வரலாறு படைத்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டு வரப்படவில்லை. 67 கலை மற்றும் அறிவியல் கல்லூரியை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். நாடு ஏற்றம் பெற கல்வி முக்கியம். கல்வியை வைத்து தான் நாடு வளர்ச்சி பெறும், அதை கொடுத்த அரசு அதிமுக அரசு. மாணவ, மாணவிகள் திறமைகளை வளர்க்க பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தியது அதிமுக அரசு. அரசின் நிர்வாக சீர்கேட்டால் இளைஞர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த பின் அம்மா மினி கிளினிக் திட்டம், திருமண உதவி திட்டம் மீண்டும் தொடரும். திமுக ஆட்சியில் கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. மக்கள் கனவில் தான் வீடு கட்ட முடியுமே தவிர நிஜத்தில் வீடு கட்ட முடியாது. ஜல்லிக்கும், எம்.சாண்டுக்கும் ஒரு டன்னுக்கு ரூ.100 கமிஷன் தர வேண்டும் என அத்துறை அமைச்சர் ஆதாரமில்லாத சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல் வந்துள்ளது. மக்கள் செல்வாக்கை திமுக அரசு இழந்து விட்டது. 2026ல் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்த அரசு அதிமுக அரசு. சிறுபான்மை மக்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் அரசு அதிமுக அரசு.தமிழகத்தில் மத சண்டை, ஜாதி சண்டை இல்லாமல் இருந்தது அதிமுக ஆட்சியில் தான். இவ்வாறு அவர் பேசினார்.பிரச்சார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கோகுல இந்திரா, விஜயபாஸ்கர், காமராஜ், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொறடா ஆர்.மனோகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு, மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் ஏலக்காய் மாலை மற்றும் செங்கோல் வழங்கி சிறப்பித்தார்.
Comments are closed.