திருச்சியில் அனுமதியின்றி வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அகற்றப்படும்… * வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ்…!
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து 29-ம் தேதி விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற
உள்ளன. இந்நிகழ்வுகள் அமைதியாகவும், சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டும் நடைபெற மாநகர காவல் ஆணையர் ந. காமினி ஐபிஎஸ் தலைமையில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியார் ஹோட்டலில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள், ஈஸ்வரன், சுபின், காவல் உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பது மற்றும் ஊர்வலம் தொடர்பாக சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு போலீஸ் கமிஷனர் காமினி ஐபிஎஸ் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
சிலை வைக்க காவல்துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி வைக்கப்படும் சிலைகள் அகற்றப்படும். புதிய இடங்களில் சிலை வைக்க அனுமதி கிடையாது. கடந்த ஆண்டு வைத்த இடங்களிலேயே வைக்க வேண்டும். தனியார் இடங்களில் வைக்க உரிமையாளரின் எழுத்துப்பூர்வ அனுமதி பெறப்பட வேண்டும். அதிகபட்சம் 10 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் நிறுவ அனுமதி வழங்கப்படும். களிமண் சிலைகள் வைக்க மட்டுமே அனுமதிக்கப்படும். இரசாயனப் பொருட்களால் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படும் மேடைகள் தீப்பிடிக்காத பொருட்களால் (தகரம்/ஆஸ்பெஸ்டாஸ்) அமைக்கப்பட வேண்டும். கீற்றுக் குடில்களுக்கு அனுமதி கிடையாது. மருத்துவமனை, பள்ளி/கல்லூரி, வேறு மத வழிபாட்டு தலங்கள் அருகில் சிலை வைக்கக் கூடாது. மின் இணைப்புகளுக்கான மாற்று ஏற்பாடாக ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும். தீயணைப்பு கருவிகள், தண்ணீர், மணல் வாளிகள் வைக்கப்பட வேண்டும். சிலை அருகில் எப்போதும் பாதுகாப்பு குழு இருக்க வேண்டும். பூசாரிகளின் பெயர், முகவரி மற்றும் பூஜை நேரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். எளிதில் தீப்பற்றும் பொருட்கள் வைக்கக் கூடாது. அவசர மருத்துவ வசதி அருகில் இருக்க வேண்டும். பிறரை புண்படுத்தும் வாசகங்கள் எழுதக் கூடாது. 29.08.2025 மாலை 5 மணிக்குள் சிலைகளை அனுமதிக்கப்பட்ட வாகனங்களில் மட்டும் ஊர்வலமாக எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். வாகனங்களில் கூடுதல் நபர்கள் பயணம் செய்யக் கூடாது. மது அருந்தி வருபவர்கள் ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. பிற மத வழிபாட்டு தலங்களை ஊர்வலம் கடக்கும் போது அமைதியுடன் நடந்து கொள்ள வேண்டும். இதற்கு விழா அமைப்பாளர்களே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். வாகனங்களில் கூம்பு வடிவிலான ஒலி பெருக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பெட்டி வடிவ ஒலிப்பெருக்கிகள் காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் மட்டுமே பயன்படுத்தலாம். ஊர்வலத்தின் போது வெடிகள் வெடிக்கக் கூடாது. சிலைகளை கரைக்கும் முன் அலங்காரப் பொருட்கள், மாலைகள், ஆடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு வெறும் சிலைகள் மட்டுமே நீரில் கரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed.