தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை எதிரி பாஜக:அரசியல் எதிரி திமுக- 2026ல் கண்டிப்பாக அரசியல் மாற்றம் ஏற்படும்* மதுரை மாநாட்டில் விஜய் பரபரப்பு பேச்சு…!
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக அரசியலில் விறுவிறுப்பு காட்டி வரும் அவர் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். தற்போது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் இன்று(21-08-2025) நடத்தினார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டது. மாநாட்டில் பங்கேற்பதற்காக விடியற்காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வேன், கார், டூரிஸ்ட் வாகனங்களில் சாரை, சாரையாக வந்து குவிந்தனர். இதனால், மாநாடு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே தொடங்கியது. வாகனம் பார்க்கிங் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு இருந்தது. மாநாட்டில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர். மாநாட்டு மேடையில் விஜயின் பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா மற்றும் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுன் மற்றும் நிர்வாகிகள், 118 மாவட்டச் செயலாளர்கள் அமர்ந்திருந்தனர். மாலை 3- 45 மணி அளவில் விஜய் மாநாட்டு மேடைக்கு வந்தார். அதனைத் தொடர்ந்து ‘ரேம்ப் வாக்’ சென்று தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடியே சென்றார். அதனைத் தொடர்ந்து கட்சிக்கொடி ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராக பேசத் தொடங்கினர். இறுதியாக விஜய் பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,
சிங்கம் வேட்டையாட தான் வெளியே வரும்.வேடிக்கை பார்க்க வராது. செத்துப் போனதை தொட்டுக் கூட பார்க்காது. சும்மா கெத்தா தனியா வந்து அனைத்துக்கும் தண்ணி காட்டும். சிங்கம் கர்ஜித்தால் 8 கிலோ மீட்டர் தூரம் அதிரும். மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. அதுமட்டுமின்றி புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். அவரும் இந்த மதுரை மண்ணைச் சேர்ந்தவர் தானே. 1967, 1977 போல 2026-ல் வரலாறு திரும்பப் போகிறது. இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி. ஒன்று டிவிகே இன்னொன்று டிஎம்கே. நம்முடைய கொள்கை எதிரி பாசிச பாஜகவும், அரசியல் எதிரி பாய்சன் திமுகவும் தான். பிரதமர் நரேந்திர மோடி அவர்களே உங்களை ஒன்று கேட்டுக்கொள்கிறேன்.தமிழக மீனவர்கள் இலங்கை கடல் படையினரால் அடிக்கடி சிறைபிடிக்கப்படுகிறார்கள். எங்கள் மீனவர்கள் நலனுக்காக கச்சத்தீவை எங்களிடம் மீட்டு கொடுத்து விடுங்கள். அதேபோல மாணவர்கள் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வு எங்களுக்கு தேவையில்லை. தமிழ்நாடு சிஎம் ஸ்டாலின் அங்கிள் அவர்களே தமிழகத்திற்கு நீங்கள் செய்தது என்ன?. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா? . பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா?. அவர்கள் அலறும் சத்தம் உங்கள் காதுகளில் கேட்கவில்லையா? மீனவர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்களா? டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூபாய் ஆயிரம் கோடிக்கு ஊழல் நடந்திருக்கிறது. இது மட்டுமா எங்கு பார்த்தாலும் ஊழல்…. ஊழல்….ஊழல் தான். உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் அங்கிள். எம்ஜிஆர் இருந்தவரை அவரை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியவில்லை. 2026 தேர்தலில் முடிவு கட்டப்படும். நான் இப்போது வேட்பாளர் பட்டியலை அறிவிக்க போகிறேன். மதுரை கிழக்கு விஜய், மதுரை மேற்கு விஜய், மதுரை மத்தி விஜய், மதுரை தெற்கு விஜய், இது மட்டுமா 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் போட்டியிடுவான். உங்கள் வீட்டு பிள்ளைகளில் ஒருவர் நிற்பதாக கருதி தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களியுங்கள். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Comments are closed.