Rock Fort Times
Online News

அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்…* ஆக.26ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி திறம்பட செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளிலும் சுமார் 3.05 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15.9.2022 அன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவச் செல்வங்களுக்கு காலை உணவினை பரிமாறி திட்டத்தினை தொடங்கி வைத்தார். இத்திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெருத்த வரவேற்றைப் பெற்றது. இதனால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25.8.2023 அன்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பிறந்த ஊராகிய திருக்குவளையில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். இதன்மூலம் 30 ஆயிரத்து 992 பள்ளிகளில் பயிலும் 18 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் காலை உணவை சூடாகவும் சுவையாகவும் உண்டு மகிழ்ச்சியோடு பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்திப் படித்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக 15.7.2024 அன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள். இத்திட்டத்தினால் பள்ளிக்கு வருகை தரும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்படுத்தப்பட்டு 90%க்கும் அதிகமான குழந்தைகளின் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் காணப்பட்டுள்ளது. மேலும் மாணவ, மாணவிகள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச்சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் களையப்பட்டதுடன் குழந்தைகளின் ஆரோக்யமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்