Rock Fort Times
Online News

பிரசார கூட்டத்திற்குள் நாங்கள் எதற்காக ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்க போகிறோம்… * இபிஎஸ் பேச்சுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி…!

திருச்சி தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புரையாற்றினார். கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தமிழக பள்ளி கல்வி துறை நலிவடைந்துள்ளதாக அன்புமணி கூறியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பல தொழில்நுட்பங்களை கொண்டு வந்து மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருகிறோம். தமிழகத்தில் தொடக்க கல்வி அளவில் இடைநிற்றல் இல்லாத நிலை தான் உள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் தேசிய அளவில் இடைநிற்றல் சதவீதம் 14 சதவீதமாக இருந்தது. அதனை 7.7 சதவீதமாக குறைத்துள்ளோம். 13 ஆண்டுகளுக்குப் பிறகு இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறோம். நிலைமை இவ்வாறு இருக்க அன்புமணி எதை வைத்து பள்ளிக்கல்வித்துறை நலிவடைந்துள்ளதாக கூறுகிறார் என்பது தெரியவில்லை. ஆம்புலன்ஸ் என்பது உயிர் காக்கக்கூடியது. அதனுடைய முக்கியத்துவத்தை குறைக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கக் கூடாது. அவர் பேசும் பிரச்சாரக் கூட்டத்தில் நாங்கள் எதற்காக ஆம்புலன்ஸை அனுப்பி வைக்கப் போகிறோம். முன்னாள் முதல்வராக இருந்தவர் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்க கூடாது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்