இந்தியா முழுவதும் இன்று( ஆக.15) சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் சுதந்திர தின விழா காலை 7.30 மணிக்கு தொடங்கியது. ‘‘புதிய பாரதம்’’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த விழாவுக்கு காலை பிரதமர் வருகை தந்த போது நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இணை மந்திரி சஞ்சய் சேட், செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஆகியோர் அவரை வரவேற்றார்கள். தொடர்ந்து பிரதமருக்கு டெல்லி பகுதியின் ராணுவ தளபதி அறிமுகப்படுத்தப்பட்டார். அவர் பிரதமரை காவலர் மரியாதை பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் ஏற்றுக் கொண்டார். இந்த மரியாதையை 3 படைகள் மற்றும் டெல்லி போலீஸ் ஆகிய 4 பிரிவுகளில் இருந்து தலா 24 பேர் என மொத்தம் 96 பேர் பிரதமருக்கு அளித்தனர். ஒட்டுமொத்த அணிவகுப்புக்கு இந்திய விமானப்படை தலைமை தாங்கியது. அணிவகுப்பு மரியாதையை தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையின் கொத்தளம் பகுதிக்கு சென்றார். அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜநாத் சிங் தலைமையில், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் முன்னிலையில் முப்படைகளின் தளபதிகள் பிரதமரை மீண்டும் வரவேற்றனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தை தொடர்ந்து 2 ஹெலிகாப்டர்களில் அங்கு மலர் தூவப்பட்டது. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றில் தேசியக் கொடியும், மற்றொன்றில் ஆபரேஷன் சிந்தூரை சித்தரிக்கும் கொடியும் பொருத்தப்பட்டிருந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பிரமாண்ட இசையுடன் கொடி வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து 79-வது சுதந்திர தினவிழாவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த தீபாவளியை, நான் உங்களுக்கு இரட்டை தீபாவளியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளியில் நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசைப் பெறுவார்கள். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். இது நாடு முழுவதும் வரி சுமையைக் குறைக்கும். தீபாவளிக்கு முன்னதாக இது ஒரு பரிசாக இருக்கும். அதற்கான குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு தீபாவளி, மக்களுக்கு இரட்டை தீபாவளியாக இருக்கும். இது சாமானிய மக்களுக்குப் பொருட்களின் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைக்கும். இதனால் நமது சிறுதொழில் வியாபாரிகள் பெரிதும் பயனடைவார்கள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் மலிவாக கிடைக்கும். இது நமது பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்” என்று கூறினார்.

Comments are closed.