Rock Fort Times
Online News

திருச்சி, துவாக்குடியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் 2 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை:- தலைமை ஆசிரியர் “டிரான்ஸ்பர்”…!

திருச்சி, துவாக்குடிமலை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ரூ.56 கோடி மதிப்பீட்டில் அரசு மாதிரிப் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டது. இதனை அண்மையில் திருச்சி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகள் தங்கி பயில விடுதி வசதியும் உள்ளது. இங்கு திருச்சி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். சிலர் ஹாஸ்டலில் தங்கியும் உள்ளனர். இந்நிலையில், இப்பள்ளியில் பிளஸ்- 2 படித்துக்கொண்டு கிளாட் எனும் சட்ட நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கடந்த ஜூன் மாதம் விடுதி அறையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதேபோல வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு பிளஸ்-2 மாணவரும் கடந்த மாதம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து 2 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது சக மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் திருச்சி மாவட்டம், அரசங்குடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கு தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த அகிலன், துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளி தலைமையாசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அரசு மாதிரி பள்ளியில் அடுத்தடுத்து நடைபெற்ற மாணவர்களின் தற்கொலைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, இங்கு பணியாற்றி வந்த தலைமையாசிரியர் அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் விருப்ப மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்