Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி தாயாருக்கு நம்பெருமாள் சீர் கொடுக்கும் நிகழ்ச்சி கோலாகலம்…!

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி 18ம் நாள் அல்லது 28ம் நாளில் நம்பெருமாள் அம்மாமண்டபம் படித்துறையில் காலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் மாலை காவிரி தாயாருக்கு மங்கலப்பொருட்களை சீர்வரிசையாக கொடுப்பார். அதன்படி, இந்தாண்டு ஆடி 28ம் நாளான இன்று நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கோவில் மூலஸ்தானத்திலிருந்து காலை 6.30 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 11மணிக்கு அம்மாமண்டபம் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிவரை நம்பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் நம்பெருமாள் காவிரி தாயாருக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி மாலை 4.45 மணிக்கு நடைபெற்றது. பட்டுசேலை, மாலை, சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை கோவில் யானை ஆண்டாள் மீது வைத்து காவிரி படித்துறைக்கு கொண்டு வந்து சீர்வரிசை கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நம்பெருமாள் அம்மாமண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மேலஅடையவளஞ்சான் வீதியில் உள்ள வெளி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றிக்கொண்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்