Rock Fort Times
Online News

வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்: திருவெறும்பூரில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” தொடங்கி வைத்தார், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!. 

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 12) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இந்த திட்டத்தை தொடங்கி
வைத்தனர். அந்தவகையில் திருச்சி, திருவெறும்பூர் மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் இந்தத் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ்  பொய்யா மொழி தொடங்கி வைத்து 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களை தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார். அப்போது மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் மு.மதிவாணன், மாமன்ற உறுப்பினர்கள் சீதாலட்சுமி முருகானந்தம்,  பியூலா மாணிக்கம்,   திருச்சி சரக கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் முத்துலட்சுமி, திருவெறும்பூர் கூட்டுறவு துறை சார்பதிவாளர் கபிலன் உட்பட அரசு அதிகாரிகள்  கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்தத் திட்டத்தின் கீழ் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 52 வாகனம் மூலம் மாதம்தோறும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி சென்று கூட்டுறவு துறை ஊழியர்கள்  பொருட்கள் விநியோகம்  செய்வார்கள். இதேபோல ‘ நலம் காக்கும் ஸ்டாலின்’, ‘உங்களுடன் ஸ்டாலின்’ போன்ற திட்டங்களை தமிழக முதல்வர்  செயல்படுத்தி வருகிறார். இந்தத் திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 207 பள்ளிகள் மூடப்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, மாணவர் சேர்க்கை பூர்த்தி அடையவில்லை, மாணவர்கள் சேரவில்லை என்றால் சுற்று வட்டார பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பள்ளிகள் மூடப்படும் என்று கூறுவது தவறான கருத்தாகும். அதை எந்த அரசும் செய்யாது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்