Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிக்க வேண்டும்-* மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்பி வலியுறுத்தல்!

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதாக கருதப்படும் திருச்சி, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில், 2014ம் ஆண்டு இந்திய அரசால் யுனெஸ்கோவின் தற்காலிக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், இதற்கு அடுத்த கட்ட நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, மத்திய கலாச்சார துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து ஒரு மனு அளித்தார். அதில், எனது திருச்சி தொகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலை யுனெஸ்கோ அமைப்பு, 10 தகுதிகளில் ஒரு தகுதியை பூர்த்தி செய்தாலே உலக பாரம்பரிய சின்னம் தகுதி கிடைக்கும் சூழ்நிலையில், ஶ்ரீரங்கம் திருத்தலமானது இவற்றுள் நான்கு தகுதிகளை பூர்த்தி செய்கிறது. மேலும், 2017ம் ஆண்டு இந்தக் கோவில் விஞ்ஞான ரீதியில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டதற்காக யுனெஸ்கோவின் விருதையும் பெற்றுள்ளது. ஸ்ரீரங்கம் கோவில், அதன் ஒப்பற்ற கட்டிடக்கலை பிரம்மாண்டத்திற்கும், ஆழமான ஆன்மீகப் பாரம்பரியத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஆகவே 2014ம் ஆண்டு தற்காலிக பட்டியலில் இடம்பெற்ற இந்தக் கோவிலை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பதற்கு பரிந்துரை செய்ய வேண்டும். திருச்சி மக்களும், நாடு முழுவதும் உள்ள பக்தர்களும் இந்தக் கலாச்சாரப் பொக்கிஷத்தை ஆழமாக மதிக்கின்றனர். இதனை கருத்தில் கொண்டு, ஸ்ரீரங்கம் கோவிலை உலக பாரம்பரிய தலமாக அங்கீகரிப்பது, அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல், எதிர்கால சந்ததியினர் இந்த கோவிலை பாதுகாக்கும் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்