திருச்சி கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டக்கோரி விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் ஆற்றில் இறங்கி நூதன போராட்டம்…!
திருச்சி மாநகரையும், புறநகரையும் இணைக்கும் வகையில் நேப்பியர் வடிவில் கட்டப்பட்ட கொள்ளிடம் பாலத்தின் அடியில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதன் அருகே தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த தடுப்பு சுவர் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ஆயிரம் மீட்டர் அளவிற்கு ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. இதனால், சலவைத் தொழிலாளர் குடியிருப்பில் தண்ணீர் சூழ்ந்தது மட்டுமல்லாமல் 2 உயர் மின்னழுத்த கோபுரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் இந்த ஆண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அழகிரி புரம் பகுதியில் நான்கு வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. அது மட்டுமல்லாமல் 30 அடி அகலத்திற்கு 800 மீட்டர் தூரத்திற்கு கரை உடைந்தது. இதனால் சலவைத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இடிந்த தடுப்பு சுவரை கட்ட வேண்டும். மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இதனை தடுப்பதற்கு 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆற்றில் ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். காவிரி, அய்யாறு திட்டம் 50 ஆண்டுகளுக்கு முன்பு பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சலவை தொழிலாளர்களுக்கு படித்துறை கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் மற்றும் சலவை தொழிலாளர்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி கழுத்தளவு தண்ணீரில் நின்று கோஷங்களை எழுப்பி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Comments are closed.