Rock Fort Times
Online News

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி டெஸ்டில் இந்திய பவுலர்கள் அபாரம்: 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தல்…!

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்தன. 23 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதன்மூலம் இங்கிலாந்துக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மெகா இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது. பென் டக்கெட் 34 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்தநிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இங்கிலாந்தின் பென் டக்கெட்டும், பொறுப்பு கேப்டன் ஆலி போப்பும் பேட்டிங் செய்தனர். அரைசதத்தை கடந்த டக்கெட் 54 ரன்னிலும், ஆலி போப் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது இங்கிலாந்து 3 விக்கெட்டுக்கு 106 ரன்களுடன் தடுமாற்றதத்திற்குள்ளானது. இந்த சூழலில் 4-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட்டும், ஹாரி புரூக்கும் கைகோர்த்தனர். இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினர். ஹாரி புரூக் 111 ரன்களிலும், ஜோ ரூட் 105 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 76.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 339 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழையும் பெய்ததால் அத்துடன் 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 2 ரன்களுடனும், ஜேமி ஓவர்டான் ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்தின் வெற்றிக்கு 35 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற பரபரப்பான சூழலில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று( ஆகஸ்ட் 4) தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜேமி சுமித் (2 ரன்கள்) மற்றும் ஜேமி ஓவர்டான் (9 ரன்கள்) இருவரையும் சிராஜ் காலி செய்தார். இதனால் ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியது. சிறிது நேரம் தாக்குப்பிடித்து விளையாடிய கஸ் அட்கின்சன் – ஜோஷ் டாங் ஜோடி வெற்றியை நோக்கி பயணித்தாலும் இந்திய பவுலர்கள் அவர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இந்திய அணி எஞ்சிய விக்கட்டையும் கைப்பற்றி 6 ரன்கள் வித்தியாசத்தில் “திரில்” வெற்றியை பெற்றது. முகமது சிராஜ் 5 விக்கெட்களையும் கிருஷ்ணா 4 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினர். இதனால் 5 டெஸ்டுகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்