Rock Fort Times
Online News

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் மங்கலப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி…!

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியினால் அவருக்கு பூமாலையுடன் பாமாலை சூட்டியதோடு அவரிடமே மணமாலையும் சூடிக் கொண்டாள். இதனால் ஆண்டாளுக்கு சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற சிறப்புப்பெயரும் உண்டு. ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்த உறவும், மங்களப்பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் முதல் இருந்து வந்தது. பல்வேறு காரணங்களினால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. எனினும் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் தற்போது அவ்வழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் ஸ்ரீரங்கம் சித்திரைத் தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல்நாள் ஸ்ரீரங்கத்திலிருந்தும் பரஸ்பரம் மங்கலப்பொருட்கள் பரிவர்த்தனை நடந்து வருகிறது. இவ்வகையில் நாளை ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நடக்கவுள்ளதை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள், மஞ்சள், குங்குமம், பழங்கள், சந்தனம், தாம்பூலம் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு ஆண்டாள் கோவிலில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இதற்காக ரெங்கநாதர் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் கொண்டு செல்லவுள்ள மங்கலப்பொருட்கள் கோவில் ரங்கவிலாச மண்டபத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின், உள்வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த மங்கலப்பொருட்கள் நாளை காலை ஸ்ரீரங்கத்திலிருந்து புறப்பட்டு மதியம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில், ரெங்கநாதர் கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள் மூலம் வழங்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்