பிரதமர் மோடி 2 நாள்( ஜூலை 26, 27) சுற்றுப்பயணமாக தமிழகம் வருகிறார். மாலத்தீவில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு ராணுவ விமானத்தில் தூத்துக்குடிக்கு வரும் அவர் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். திருச்சியில் இரவு தங்கும் அவர் மறுநாள் காலை 27-ந் தேதி அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் நடக்கும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு பகல் 2.25 மணிக்கு பிரதமர் மோடி திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்கிடையில், தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடியை சந்திக்க முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அனுமதி கேட்டு நேற்று கடிதம் எழுதினார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், வரும் 26-ம் தேதி, தூத்துக்குடியில் புதிய விமான நிலைய டெர்மினல், விரிவாக்கப்பட்ட ரன்வே மற்றும் எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது மிகுந்த மரியாதையும், நன்றியுடனும் நிறைந்த பாக்கியமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேற்பின்போது சந்திப்பாரா? அல்லது வழியனுப்பும்போது இந்த சந்திப்பு நடைபெறுமா என்பது குறித்த உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Comments are closed.