பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: ஜூலை 27ம் தேதி கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடித்திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்…!
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜூலை 26) தமிழகம் வருகிறார். கேரளாவில் இருந்து நாளை இரவு 7.50 மணிக்கு பிரதமர் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் மற்றும் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு இரவு 10.35 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்குள்ள அரசினர் விடுதியில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர், 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரத்திற்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ‘ரோடு ஷோ’வில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார். இதையடுத்து பிரகதீஸ்வரர் கோவிலுக்கு செல்கிறார். பின்னர் பிரதமர் மோடி வாரணாசியில் இருந்து கொண்டு வரும் கங்கை நீரால் பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் சாமி தரிசனம் செய்யும் அவர், கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிடுகிறார். பின்னர், அங்கு நடைபெறும் விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். அதனைத்தொடர்ந்து இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மதியம் சுமார் 1.30 மணியளவில் கோவிலில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு திருச்சி வருகிறார். அங்கிருந்து 2.30 மணியளவில் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். தமிழகம் வரும் பிரதமர் மோடி ரூ.1,030 கோடியில் நிறைவடைந்த ரெயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரதமர் வருகையை யொட்டி தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.