Rock Fort Times
Online News

நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்: இனி சார்-பதிவாளர்கள் ‘இங்கே’ பேசினால் அது ‘அங்கே’ கேட்கும்…!

தமிழகத்தில் 585 இடங்களில் சார் – பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, சொத்து விற்பனை மட்டுமல்லாது, திருமணப் பதிவு, சங்கங்கள், நிறுவனங்கள் பதிவு தொடர்பான ஆவணங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களை,
சார் – பதிவாளர்கள் நேரடியாக சந்திக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தந்த சார் - பதிவாளர் அலுவலகங்கள் அருகிலிருக்கும், ஆவண எழுத்தர்கள் வாயிலாக வரும் ஆவணங்கள் மட்டுமே அலுவலர்களின் பரிசீலனைக்கு செல்கின்றன. இதை தவிர்த்து, பொது மக்கள் நேரடியாக பத்திரங்களை தாக்கல் செய்தால், அதில் ஏதேனும் குறைகளை சுட்டிக்காட்டி, திருப்பி அனுப்பப்படும். சார் – பதிவாளர் அலுவலகத்தில் பணியாளர்கள், பொதுமக்கள் தவிர்த்து, வெளியாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், சார் – பதிவாளர்களின் ஒத்துழைப்புடன், வெளியாட்கள் வந்து செல்வதாக புகார் கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு சார் – பதிவாளர் அலுவலகத்திலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக தலைமை அலுவலக அதிகாரிகள், தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்து, சார் – பதிவாளர் அலுவலகத்தில் நடக்கும் பேச்சுகளையும் கண்காணிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளியாட்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில், ஒவ்வொரு சார் – பதிவாளர் அலுவலகத்திலும், ஐந்து இடங்களில் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதிவாகும் காட்சிகளை, நேரலை முறையில், டி.ஐ.ஜி., அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க முடியும். இதுவரை காட்சிகளை மட்டும் காண முடிந்தது. தற்போது, குரல் பதிவுகளையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதனால், பத்திரப்பதிவின் போது, பொது மக்களிடம், சார் – பதிவாளர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை, தலைமை அலுவலகத்தில் இருந்து, துல்லியமாக கேட்க முடியும். இதனால், பொதுமக்கள் யார், தரகர் யார் என்பதை, எளிதாக கண்டுபிடிக்க முடியும். தரகர்கள் நடமாட்டத்தை அனுமதிக்கும், சார் – பதிவாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்