திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடிக்கு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி…- மீண்டும் இயக்க வேண்டுகோள்!
திருச்சியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் இம்மாதம் ஜூலை 16ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட புறநகர் மற்றும் மாநகர் பேருந்துகள் பஞ்சப்பூரிலிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகளின் நலன்கருதி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கீரனூர், விமான நிலையம், இனாம்குளத்தூர், ஓலையூர், கே.கே.நகர், தில்லை நகர் உறையூர், எடமலைப்பட்டி புதூர், விராலிமலை போன்ற ஊர்களுக்கு வழக்கம்போல டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர் வழியாக துவாக்குடிக்கு இயக்கப்பட்ட டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால், பஞ்சப்பூர் சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்ல வேண்டி இருக்கிறது. துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளில் என்.ஐ.டி., எஸ்.ஐ.டி. மற்றும் அரசு கலைக் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இதனால், மாணவ மாணவிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதேபோல துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் அங்கும், இங்கும் அலைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மாலை நேரங்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. ஆகவே, வழக்கம்போல மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி, திருவெறும்பூர் பகுதிகளுக்கு மீண்டும் டவுன் பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments are closed.