கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா. இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம். முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆவார். சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க. மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவியும் வகித்து வருகிறார். இந்தநிலையில் சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதனைத்தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று( ஜூலை 18) காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர். அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சத்யா மற்றும் அவரது கணவர் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மீண்டும் அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.