Rock Fort Times
Online News

ஓடும் ரெயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய குற்றவாளிக்கு சாகும் வரை சிறை – கோர்ட்டு அதிரடி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். 4 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், மருத்துவ பரிசோதனைக்காக ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்காக கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். ரெயில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்- கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது இளம்பெண் கழிவறைக்கு சென்றார். அப்போது கழிவறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர், அவரை வழிமறித்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதை எதிர்பாராத இளம்பெண் கூச்சலிட, சக பயணிகள் அங்கு வந்தனர். அதற்குள்ளாக அந்த பெண்ணை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு அவர் வேறு பெட்டிக்கு மாறி தப்பினார். பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனடியாக ரெயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரெயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரெயில் தண்டவாளத்தில் கிடந்த கர்ப்பிணியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. தலையிலும் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அவரை ரெயிலில் இருந்து கீழே தள்ளிய வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சேர்ந்த ஹேமராஜ் (30 வயது) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஹேமராஜ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை திருப்பத்தூர் மாவட்ட கோர்ட்டு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமராஜ் குற்றவாளி என்று நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார். மேலும், அவருக்கான தண்டனை விவரங்கள் 14-ந்தேதி( இன்று) அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன், சாகும் வரை சிறை தண்டனையும் விதித்து மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பளித்தார். மேலும் தமிழக அரசும், ரெயிவே துறையும் சேர்ந்து ரூ.1 கோடி நிவாரணத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்