Rock Fort Times
Online News

தனியார் பால் நிறுவனத்தில் ரூ.45 கோடி கையாடல்: மேலாளர் தற்கொலை வழக்கில் போலீஸ் அதிகாரிக்கு தொடர்பா?… * விசாரணைக்கு உத்தரவிட்டார், சென்னை போலீஸ் கமிஷனர் அருண்…!

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் நவீன் பஞ்சலால் (37). புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் முதல் தெருவில் வசித்து வந்த இவர், சென்னையில் உள்ள திருமலா பால் நிறுவனத்தில் கடந்த 3 வருடங்களாக மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வருடாந்திர கணக்கு சமர்ப்பிக்கும்போது, இவர் ரூ.45 கோடி பணத்தை கையாடல் செய்தது உயரதிகாரிகளுக்கு தெரியவந்தது. திருமலா பால் நிறுவன சட்ட ஆலோசகர்கள் இதுகுறித்து கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் புகார் கொடுத்தனர். இந்நிலையில் விசாரணைக்கு பயந்து நவீன் பஞ்சலால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக புழல் போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் தனியார் பால் நிறுவன மேலாளர் தற்கொலை விவகாரத்தில் போலீஸ் துணை கமிஷனர் பாண்டியராஜனை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. எனவே இது தொடர்பாக மேற்கு மண்டலஇணை கமிஷனர் முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சென்னை மாநகர போலீ்ஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக சென்னை பெருநகர போலீஸ் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நவீன் பஞ்சலால் தனது சகோதரி மற்றும் திருமலா பால் நிறுவனத்துக்கு அனுப்பிய மின்னஞ்சலில் காவல்துறையினரை பற்றி எவ்வித குற்றச்சாட்டையும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் சிலர் அவரது தற்கொலையில் கொளத்தூர் காவல் துணை கமிஷனரை தொடர்வுபடுத்தி செய்தி வெளியிடப்பட்டுள்ளதால், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பரபரப்பு கடிதம்:

இதற்கிடையே, தற்கொலை செய்வதற்கு முன்பாக மேலாளர் நவீன் பஞ்சலால் பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது சகோதரி ஆகியோருக்கு மின் அஞ்சலில் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘என்னை சந்தித்த நரேஷ் மற்றும் முகுந்த் ஆகிய இருவரும் மோசடி செய்த பணத்தை திருப்பி கொடுத்தாலும் ஜெயிலில் இருப்பாய் என மிரட்டினர். இதனால் அச்சமடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன். என்னுடைய தற்கொலைக்கு திருமலா பால் கம்பெனி நிர்வாகமே காரணம். மோசடி குறித்து வெளியே தெரிந்த பிறகு நான் அதை சரி செய்து விடுவதாகக் கூறி முதல் கட்டமாக கடந்த மாதம் 26ம் தேதி 5 கோடி ரூபாய் திருப்பி செலுத்தினேன். பின்னர் 3 மாதத்தில் மீதி தொகையை செலுத்தி விடுவதாக உறுதி அளித்தேன். இந்த மோசடியில் எனக்கு மட்டுமே தொடர்பு, வேறு யாருக்கும் தொடர்பில்லை. பணம் கைமாறப்பட்ட நான்கு கணக்குகளில் இருந்து மொத்த பணமும் என்னிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த மோசடியில் வேறு யாரும் பயனடையவில்லை. இந்த மோசடி தொடர்பாக பால் நிறுவன அதிகாரிகள் புகார் ஏதும் அளிக்க வேண்டாம். பால் நிறுவனம் என்னுடைய சொத்து ஆவணங்களையும், பாஸ்போர்ட்டையும் காசோலைகளையும் வாங்கி வைத்துள்ளது. பாஸ்போர்ட்டை வாங்கி வைத்ததற்கான அத்தாட்சி கூட கொடுக்கவில்லை. இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என கூறியபோதும் பால் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாமல் என்னை சித்ரவதை செய்தது. எனவே, என்னுடைய சடலத்திலிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். இப்போது உங்களால் எதையும் மீட்க முடியாது. (பால் நிறுவன அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு) எனது சடலத்தை அலுவலக வாசலில் வைத்து பணத்தை வசூலித்துக் கொள்ளுங்கள். பால் நிறுவனத்தில் பல மோசடிகள் நடைபெற்று வருகிறது. என்னுடைய மரணம் உங்களது சாம்ராஜ்யத்தை விரைவில் அசைத்துப் பார்க்கும்’ என நவீன் தெரிவித்திருந்தார். இந்த கடிதத்தில், பால் நிறுவன அதிகாரிகள் மற்றும் தனது குடும்பத்தினர் என அனைரையும் குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு வருத்தத்தையும் நவீன் பதிவு செய்திருந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்