திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விடுதியில் மாணவர் மரணம்: சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி ஜி.ஹெச்.முன்பு உறவினர்கள் மறியல் போராட்டம்…!
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் அபிஷேக்(19). இவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்தார். இவர் சரியாக கல்லூரிக்கு செல்வதில்லை என விடுதி வார்டன் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் அங்கிருந்தபடி தனது மகனை செல்போனில் கண்டித்துள்ளார். இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அபிஷேக் நேற்று( ஜூலை 8) கல்லூரி பாத்ரூமில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மாணவரின் உறவினர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் ஒன்று திரண்டு அபிஷேக் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மைகள் மூடி மறைக்கப்படுவதாகவும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து திருச்சி அரசு மருத்துவமனை மெயின் கேட் முன்பு அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மாணவர் அமைப்பினரும் பங்கேற்றனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் அரசு மருத்துவமனை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறியதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
Comments are closed.