போலீசாரின் பாதுகாப்பு அரணை உடைத்துக் கொண்டு திருச்சி ரயில் நிலையத்திற்குள் புகுந்து மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கைது…! (வீடியோ இணைப்பு)
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்த பட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ‘இன்று( ஜூலை 9) நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தம் நடைபெறும் என்று மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன. இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அதிமுக தொழிற்சங்க ஊழியர்கள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி ரயில் நிலையத்திற்கு பேரணியாக வந்தனர். அவர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்லாதவாறு பாதுகாப்பு அரண்களை போலீசார் அமைத்திருந்தனர். ஆனால் அதனை உடைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
Comments are closed.