Rock Fort Times
Online News

போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்…!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்ரீகாந்த் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல், ‘இந்த வழக்கில் முதல் எதிரி அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து போதைப்பொருள் எதுவும் கைப்பற்றப்படவில்லை’ என வாதாடினார். நடிகர் கிருஷ்ணா தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நடிகர் கிருஷ்ணாவிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், போதைப்பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை’ என தெரிவித்தார். போலீசார் தரப்பில், ‘இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் மீது இன்று( ஜூலை 8) தீர்ப்பு கூறப்படும் என அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட்டு இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. ரூ.10 ஆயிரம் சொந்த ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இருநபர்கள் ஜாமீன் அளிக்க வேண்டும் எனவும், மறு உத்தரவு வரும் வரை விசாரணை அதிகாரி முன்பாக இருவரும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்