Rock Fort Times
Online News

மத்திய அரசின் இ.எல்.ஐ.திட்டம்: முதல் முறையாக பணியில் சேருவோருக்கு ரூ.15 ஆயிரம் ஊக்கத் தொகை…!

மத்திய அரசின் இஎல்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் என இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டமானது, 2 பகுதிகளாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதன்படி முதல் பகுதியில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் முதல் முறையாக பணியில் இணைந்து வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்கள் அங்கு ஓர் ஆண்டு வேலை செய்யும் பட்சத்தில், அவருக்கு 2 தவணையாக ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் முதல் தவணையாக 6 மாதங்களில் ரூ.7,500-ம், இரண்டாம் தவணையாக 12 மாதங்களில் அடுத்த ரூ.7,500-ம் வழங்கப்படும். இவை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இரண்டாம் பகுதியில் ஒவ்வொரு புதிய தொழிலாளர்களை நிறுவனத்தில் இணைக்கும்போது நிறுவன உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை ஊக்கத்தொகை கிடைக்கும். அதன்படி ரூ.10 ஆயிரம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை நிறுவனத்தில் சேர்க்கும்போது ரூ.1000-ம், ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளத்தில் தொழிலாளர்களை சேர்க்கும்போது ரூ.2 ஆயிரமும், ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை சம்பளம் பெறும் தொழிலாளர்களை சேர்க்கும் பட்சத்தில் ரூ.3 ஆயிரம் வரை நிறுவன உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.2025 ஆகஸ்டு 1-ம் தேதிமுதல் அமலுக்கு வரும் இத்திட்டம் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதியுடன் நிறைவடையும். உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக 2 ஆண்டுகளுக்கு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கும். இத்திட்டத்தால் அமைப்பு சாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள், அமைப்பு சார்ந்த தொழில் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்