நம் தாய் மொழியை பாதுகாக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்- மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேச்சு…!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் உள்ள மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்று அறிவியல் தமிழ் புத்தக கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு மணவை முஸ்தபாவின் தமிழ் தொண்டு குறித்து பேசினர். அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்தான் நம் தாய்மொழி, அந்த தமிழ் மொழியை கொஞ்சம் நாம் நழுவ விட்டு விட்டால், பல்வேறு விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை வரும். தமிழ் நம் கலாச்சாரத்தின் இனத்தின் அடையாளம். மொழியின், இனத்தின் வலு குறைகிறபோது அது காணாமல் போய் விடும். அதுபோல தான் இலங்கையில் தமிழ் மொழி அடையாளம் தெரியாமல் போய் விட்டது. இப்படி பல்வேறு மொழிகள் அடையாளம் தெரியாமல் போயிருக்கிறது. ஆகவே, தாய் மொழியை பாதுகாக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, மணவை முஸ்தபா பல்வேறு விஷயங்களை நமக்கு தந்துள்ளார். அவர் ஒருமுறை வெளிநாடு சென்ற போது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு வாத நோய் ஏற்பட்ட பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பேச்சு பயிற்சி அளிக்கப்பட்ட போது அவரால் ‘ல’ ‘ழ’ ஆகியவற்றை சரியாக சொல்ல முடியாத நிலை வந்த போது தமிழ் சொல்லை சொல்ல முடியாத எனக்கு பேச்சுபயிற்சி தேவையில்லை என்று கூறியவர். அந்த அளவுக்கு தமிழ்பற்று கொண்டவர் என்று கூறினார். இந்த நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்ற கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு செம்மொழி நாள் தொடர்பான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் சான்றிதழ் மற்றும் காசோலையை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு செயலர் ராஜாராமன், திருச்சி கலெக்டர் பிரதீப்குமார், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.