திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு வழித்தடங்களில் 9 புதிய பேருந்து வசதியை அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஜூன் 7) தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை ஜூன் 12-ந் தேதி திறக்கப்பட உள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல ஏதுவாக தமிழக முதல்வர் உத்தரவின்படி ரூ.80 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த கட்டமாக வாய்க்கால், கால்வாய்கள் படிப்படியாக தூர் வாரப்படும். இவ்வாறு அவர் கூறினார். திருச்சி பாலக்கரை பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, அந்தப் பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் இன்னும் 9 தினங்களில் முடிவடையும். பணிகள் நிறைவடைந்த பின்னர் மற்ற பணிகள் தொடங்கும் என்றார். திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு இதுகுறித்து நான் எதுவும் கருத்து கூற இயலாது. தலைமை முடிவெடுக்கும் என்றார்.
Comments are closed.