கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
2025-26-ம் கல்வியாண்டில் 1 முதல் 12- ம் வகுப்புகளுக்கு ஜூன் 2-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பள்ளிகளில் கீழ்க்காணும் நடைமுறைகளையும் பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள், அனைத்து வகை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்.
- மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள். பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும்.
- நன்னெறி வகுப்பு வாரத்திற்கு ஒரு பாடவேளை என ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்த தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும்.
- வாரத்திற்கு ஓர் பாடவேளை நூலகச் செயல்பாடுகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளையின்போது பள்ளியில் உள்ள நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்குப் பிரித்து வழங்கி அவர்கள் படித்து தெளிந்தவற்றை சார்ந்த குறிப்புகளை பாட குறிப்பேடுகளில் எழுத செய்யலாம்.
- ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் வழங்கப்பட்டிருக்கும் புத்தகங்களை இப்பாடவேளையில் மாணவர்கள் படித்தலுக்கும் ஆசிரியர்களால் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
- பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்திட தெரிவிக்கப்படும் நாட்கள் மற்றும் தேவையான நாட்களில் உரிய அறிவுரைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும். அதே நாளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில் பெற்றோர் கூட்டம் நடத்தப் பெற வேண்டும்.
- ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும்.
- வாரத்தில் ஒருநாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை, 9ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
- தலைமை ஆசிரியர், உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களைத் தவறாமல் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
- ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள், கருத்து பரிமாற்றம் சார்ந்த பேச்சு, கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதைகள் இடம்பெறலாம்.
- முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும், தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments are closed.