Rock Fort Times
Online News

திருச்சியில் நாளை (மே 23) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா: பாதுகாப்பு பணியில் 1200 போலீசார்…!

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாளை (மே 23)அரசியல் கட்சியினர் மற்றும் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதனை முன்னிட்டு மாநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் காமினி கூறுகையில், திருச்சி மாநகரத்தில் நாளை 23-ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1350-வது சதயவிழா அரசு விழாவாக நடைபெற உள்ளதை முன்னிட்டு, திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச்சிலைக்கு அமைச்சர்கள் , அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலையணிவித்து மரியாதை செய்ய உள்ளனர். இவ்விழாவில் திருச்சி மாநகர், திருச்சி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து முத்தரையர் சமுதாயத்தை சார்ந்த மக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளதால், காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இவ்விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமலும், பொதுமக்களுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படாமல் இருக்க திருச்சி மாநகர் முழுவதும் சுமார் 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகரில் செயல்பாட்டில் உள்ள 14 ரோந்து வாகனங்கள், 9 இருசக்கர ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும். 9 சோதனை சாவடிகளில் சுழற்சி முறையில் போதுமான காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் அனுமதிக்கபட்ட வழித்தடங்களில் மட்டுமே வரவேண்டும்.
இருசக்கர வாகனத்தில் வருவோர் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலைகளில் எவ்வித சாகசங்களும் செய்யக்கூடாது.
மது அருந்திவிட்டு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது. நிகழ்வுகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவேற்றம் செய்ய கூடாது. மீறினால் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நீளமான பெரியகம்புகளில் அல்லது இரும்பு கம்பிகளில் பெரிய கொடிகளை அசைத்துக்கொண்டு வர கூடாது.
நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் வாகனத்தின் மீது ஏறியும், வாகனங்களில் பக்கவாட்டில் தொங்கியபடியும் வரக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரக்கூடாது. ஒத்தக்டை சந்திப்பில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு 100 மீட்டர் அல்லது 50 மீட்டர் முன்பு காவல்துறையினர் அறிவுறுத்தும் இடத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து சென்று மாலை அணிவித்து செல்லவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்