இரவு நேரத்தில் அரசு விரைவு பேருந்தில் ஏறி திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்…! (வீடியோ இணைப்பு)
300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கு இயக்கப்படும் எஸ்இ டிசி பேருந்துகளில், கடந்த 2024-25 நிதியாண்டில் (கடந்த பிப்ரவரி வரை), நாளொன்றிற்கு சுமார் 72 ஆயிரத்து 553 பயணிகள் பயணித்துள்ளனர். விரைவு போக்குவரத்து கழகத்தால் 195 வழித்தடங்களில் நாளொன்றிற்கு ஆயிரம் திட்டமிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. அவற்றில் மாநிலத்திற்குள்ளே 90 வழித்தடங்களும், பிற மாநிலங்களுக்கு இடையே 105 வழித்தடங்களும் அடங்கும். அடிக்கடி பயணிப்பவர்களுக்கு டிக்கெட் விலையில் 50 சதவிகித கட்டண சலுகையையும் எஸ்இடிசி வழங்கி வருகிறது. ஒரு மாதத்தில் 5-க்கும் அதிகமான முறை பயணம் மேற்கொள்பவர்களுக்கு, ஆறாவது பயணத்தில் இருந்து இந்த சலுகை வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு இதன் மூலம் 4 ஆயிரத்து 376 பயணிகள் பலன் பெற்றுள்ளனர். இந்த பேருந்துகளில் அவ்வப்போது பாராமரிப்பு குறைபாடுகள் இருப்பதாக பயணிகள் புகார்கள் அளித்தனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்றிரவு தனது தினசரி பணிகளை முடித்துவிட்டு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். பேருந்து நிலைய நுழைவாயிலுக்கு சென்ற அமைச்சர் சென்னையில் இருந்து திருநெல்வெலி நோக்கி புறப்பட்ட ஏசி சொகுசுப்பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் பேருந்தின் உள்ளே சென்று பயணிகளிடம் பேருந்து சேவை எவ்வாறு உள்ளது என்று கேட்டறிந்தார். பின்னர் ஓட்டுநரிடம் பேருந்தில் ஏதாவது குறைபாடுகள் உள்ளதா?, பணிகளில் எதேனும் நெருக்கடிகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார். சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி வரை தனது பயணத்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் மேற்க்கொண்டார். அரசுப்பேருந்தில் அமைச்சர் கேபினில் அமர்ந்து கொண்டே பயணம் செய்தது பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Comments are closed.