Rock Fort Times
Online News

மும்மொழி கொள்கையை ஏற்காததால் ரூ.2,291 கோடி கல்வி நிதி தர மறுப்பு: மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது தமிழ்நாடு அரசு…!

மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2,291 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கல்வி நிதி தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக அரசு பலமுறை கடிதம் எழுதியுள்ளது. ஆனால் தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்தார். அவரது அறிவிப்புக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் மத்திய மந்திரியின் அறிவிப்பை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், தமிழ்நாட்டுக்கு நியாயமாக தர வேண்டிய கல்வி நிதி ரூ.2,291 கோடியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பிஎம்ஸ்ரீ, சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் நிதியை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என்றும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாததால் நிதியை நிறுத்தி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசுக்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி இல்லாததால் தமிழ்நாட்டில் இருக்கும் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும் சமக்ரா திட்டத்துக்கான நிதியை 6% வட்டியுடன் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்