ரிசர்வ் வங்கி உத்தரவுபடி எந்த அடமானமும் இல்லாமல் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் கடன் வழங்க வேண்டும்….* திருச்சி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு!
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நிர்வாகிகள் திருச்சி கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து இன்று( மே 19) ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், ரிசர்வ் வங்கியின் பம்பாய் தலைமை பொது மேலாளர், விவசாயிகளுக்கு கேசிசி திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை எந்த அடமானமும் இல்லாமல் வட்டிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று எல்லா வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும் உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இதனை கூட்டுறவு கடன் சங்கங்கள் கண்டு கொள்ளவில்லை. இதைக் கண்டித்து கடந்த மே 15 ம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினோம். பின்னர் 16ம் தேதி திருச்சி நபார்டு வங்கி மேலாளரை சந்தித்து ரிசர்வ் வங்கி கடிதத்தை காண்பித்தபோது எல்லா வங்கிகளிலும் கூட்டுறவு சொசைட்டிகளிலும் ஜாமீன் தாரர்கள் இல்லாமல் கடன் கிடைக்க செய்கிறோம் என்றார். ஆகவே தாங்கள் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர், இணைப்பதிவாளர் ஆகியோரை அழைத்து ரிசர்வ் வங்கி உத்தரவுபடி விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு ஒரு வாரத்தில் வங்கிகள் கடன் கொடுக்க மறுத்தால் வங்கிகள் முன்பு மறியல் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போது மாநில நிர்வாகி மேகநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.