Rock Fort Times
Online News

மலேசியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த கணவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவ வேண்டும்…! * திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண் குழந்தைகளுடன் கண்ணீர் மல்க பெண் மனு!

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி வெங்கடாசலபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பாலகிருஷ்ணன் புள்ளம்பாடி பகுதியில் டைலர் கடை வைத்திருந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மலேசியாவுக்கு டைலரிங் வேலைக்காக சென்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை, சாந்தி தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ‘ஸ்விட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. அவருடன் பணியாற்றும் நபர்களை தொடர்பு கொண்டபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். முருகன் என்பவரிடம் கேட்டபோது, பாலகிருஷ்ணனுக்கு வலிப்பு வந்தது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவித்துள்ளார். அவர் உயிரிழப்பிற்கு காரணம் குறித்து மாற்றி மாற்றி பதில் கூறப்பட்டதால் சாந்தி அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளான இன்றைய தினம் திங்கட்கிழமை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 2 மகள்களுடன் வந்த சாந்தி, அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், தங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இரண்டு வருடம் வெளிநாட்டில் இருந்து விட்டு மகள்களின் படிப்பு முடிந்ததும், நல்ல வேலைக்கு அவர்களை அனுப்ப வேண்டும் என வெளிநாடு சென்ற கணவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவரது மரணத்தில் மர்மம் இருக்கிறது.  எங்களுக்கு உதவ வேறு யாரும் இல்லை. கணவரின் உடலை தாயகம் கொண்டு வர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்