துறையூர் பேருந்து நிலையத்தில் கேஸ் கசிவால் தீ விபத்து !
5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்..!
திருச்சி மாவட்டம், துறையூர் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் ஒரு டீக்கடையில் எரி வாயுகசிவு ஏற்பட்டு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தை சுற்றி வணிக வளாகங்கள் நகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில் தனிநபர்கள் வாடகைக்கு கடைகள் நடத்தி வருகிறார்கள். பயணிகள் கூட்டம் சூழ்ந்த இந்த பேருந்து நிலைய வளாகத்தில் சசிகுமார் என்பவா் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை அறியாத கடை ஊழியர்கள் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். சற்று நேரத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததைக் கண்ட கடை ஊழியர்கள் செய்வதறியாது கடையை விட்டு வெளியில் ஓடினர் . இதனையடுத்து மள மள வென கடையில் தீப்பற்றியதில் டீக்கடை முற்றிலுமாக சேதமடைந்து தீக்கீரையானது. தகவல் அறிந்து வந்த துறையூர் தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும் கடையில் இருந்த நான்கு கேஸ் சிலிண்டர்கள் (அதில் இரண்டு காலி சிலிண்டர்கள் ) அப்புறப்படுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் வட்டாட்சியர் வனஜா நேரில் பார்வையிட்டார். உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த தீ விபத்தில் பயணிகளுக்கோ, ஊழியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ, யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை. ஆனால் கடை முற்றிலும் தீயில் கருகி ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பலாகின. இச்சம்பவம் துறையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றதால் துறையூர் பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.