Rock Fort Times
Online News

அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால் செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கு முடித்து வைப்பு- சுப்ரீம் கோர்ட்டு…!

தமிழக மின்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் செந்தில்பாலாஜி. இவர் கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில் டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தை மோசடி செய்ததாக அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தது. இதைத்தொடர்ந்து அவர், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 471 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 26-ந் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீனில் வெளியே வந்த அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. செப்டம்பர் 29-ந் தேதி அமைச்சராக பதவி ஏற்றார். இதையே காரணமாக வைத்து அமலாக்கத்துறை அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டை நாடியது. செந்தில்பாலாஜி ஜாமீன் கோரியபோது அமைச்சராக இல்லாததால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்ற அடிப்படை காரணத்தை வைத்துதான் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்பதை வழக்கு விசாரணையின் போது சுட்டிக்காட்டிய சுப்ரீம் கோர்ட்டு, செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே இருக்க விரும்புகிறாரா? அல்லது அமைச்சர் பதவியில் தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி தரப்புக்கு காட்டமாக கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக முடிவெடுக்க இன்று (திங்கட்கிழமை) வரை சுப்ரீம் கோர்ட்டு காலஅவகாசம் வழங்கியது.

இதனையடுத்து செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், செந்தில்பாலாஜி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதன்படி, இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில்பாலாஜி அமைச்சராகக்கூடாது என்றும், மீண்டும் அமைச்சராகி ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை தாக்கல் செய்ய வைக்கக்கூடாது எனவும், டெல்லி முதல்-மந்திரி தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதைபோல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும் எனவும், அவருக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என வாதிட்டார். அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல், பதவியா? ஜாமீனா? என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜி பதவி விலகி பதில் அளித்துவிட்டார் என்றும், மீண்டும் அமைச்சராக முடியாது என சுப்ரீம் கோர்ட்டு கூற அதிகாரம் இல்லை என்றும் கூறினார். இறுதியில், பதவி விலகல் தொடர்பான கவர்னர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்