தமிழக கவர்னர் முதல் காஷ்மீர் துப்பாக்கி சூடு வரை…- பரபர அரசியல் சூழலில் திருச்சியில் எம்.பி திருமாவளவன் அதிரடி பேட்டி !
ஒரு பக்கம் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் இந்தியா, மறுபக்கம் பல்கலைக்கழக வேந்தர் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி என அரசியல் சூழல் தற்போது ஹாட் டாக்காக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி வந்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்., அப்போது “ஜாதி, மதம், இனம், மொழி என்கிற வேறுபாடு இல்லாமல் இந்தியர் என உணர்வோடு பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும். ஆனால்,இந்தியாவில் பகையை வளர்த்து ஒற்றுமையில்லாத சூழலை உருவாக்கி வைத்துள்ளார்கள். 370 சட்டப்பிரிவை நீக்கினால், ஜம்மு காஷ்மீரில் எந்த பயங்கரவாத நடவடிக்கைகளும் இருக்காது என, பாஜக அரசு திரும்பத் திரும்ப கூறிவந்தது. அங்கு சுற்றுலா செல்லலாம் என்கிற பாஜக அரசின் அறிவிப்பை நம்பி மக்கள் அங்கு சுற்றுலா சென்ற போது உயிர்பலி சம்பவம் நடந்துள்ளது. எனவே மும்பை தாக்குதலுக்கு பொறுப்பேற்று, அன்றைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் பதவி விலகியது போல, தற்போதைய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷாவும் பதவி விலக வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் முரண்பாடுகள் கூர்மை அடைந்துள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின் அவர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தது தமிழ்நாடு அரசிற்கு நெருக்கடி தருவதாக உணரப்படுகிறது. துணைவேந்தர்களுக்கும் இது நெருக்கடி சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியை ஆளுநர் திட்டமிட்டே உருவாக்கியுள்ளார். இது போன்ற ஆளுநரின் செயல்பாடுகள் அவர் வகிக்கும் பொறுப்பிற்கு அழகல்ல. விடுதலை சிறுத்தைகள் சார்பில் வக்பு சட்ட மசோதாவை கண்டித்து வரும் மே 31ம் தேதி திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம் எனக் கூறினார்
Comments are closed.