Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் டாஸ்மாக் அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு:- கொலையாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை…!

திருச்சி, சமயபுரத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பாபு (வயது 28). இவர், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்று பணம் வசூலிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் பக்தர்களை அழைத்துச் செல்வது தொடர்பாக ஏற்பட்ட போட்டியில், பாபுவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளிஅருணன், அலெக்சாண்டர், ராமு, அருண், ராஜீவ்காந்தி, லட்சுமணன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 2024- ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே வைத்து பாபுவை மேற்கண்ட 9 பேரும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து பாபுவின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில், 9 பேர் மீதும் சமயபுரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த கொலை வழக்கு திருச்சி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று(24-04-2025) தீர்ப்பளிக்கப்பட்டது. வெங்கடாஜலபதி, கணேசன், விநாயக மூர்த்தி, வள்ளி அருணன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் நான்கு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் அதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று  நீதிபதி சரவணன் தீர்ப்பளித்தார். அலெக்சாண்டர், ராமு, அருண், ராஜீவ் காந்தி மற்றும் லட்சுமணன் ஆகிய 5 பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் வாதாடினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்