பிரச்சனைக்குரிய திருச்சி, உறையூர் பகுதியில் குடிநீர் வினியோகம் சீரானது- * மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் நேரில் ஆய்வு…!
திருச்சி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-8, உறையூர் பனிக்கன் தெரு மற்றும் வார்டு எண் 10 மின்னப்பன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீரோடு கழிவுநீர் கலந்து வந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால், நான்கு பேர் உயிரிழப்புக்கு குடிநீர் காரணம் அல்ல உடல்நல குறைவு மற்றும் அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவில் கொடுக்கப்பட்ட குளிர்பானங்களை குடித்ததால் தான் அவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்சனைக்குரிய உறையூர் பகுதியில் இன்று(23-04-2025) குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த குடிநீரின் தரம் குறித்து மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ஆய்வு மேற்கொண்டதோடு குடிநீரை குடித்துப் பார்த்து தரத்தை உறுதி செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் பொதுமக்கள் முன்னிலையில் தண்ணீரை குடித்து அச்சத்தை போக்கினர். இந்த ஆய்வின் போது மண்டலத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகர் நல அலுவலர் விஜய சந்திரன், செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் சென்னி கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் இப்ராகிம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Comments are closed.