காணாமல் போன 5 மாணவிகளை மூன்று மணி நேரத்தில் மீட்ட சமயபுரம் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாருக்கு எஸ்.பி. நாகரத்தினம் பாராட்டு…!
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. பயின்ற 5 மாணவிகள் இன்று(16-04-2025) இறுதித் தேர்வை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லவில்லை. நீண்ட நேரம் ஆகியும் மாணவிகள் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவர்களது பெற்றோர்கள் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் பவானி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஒரே நேரத்தில் 5 மாணவிகள் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுதொடர்பாக வழக்கு பதிந்து அவர்கள் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? அவர்களை யாரேனும் கடத்தி சென்றார்களா என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பள்ளிக்கூடப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். விசாரணையில், 5 மாணவிகளும் திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அதன்பேரில், ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா,திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தை தொடர்பு கொண்டு மேற்படி தகவலை தெரிவித்துள்ளார். அவர் உடனடியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர் வாட்ஸ்அப் குரூப்புகளிலும் பகிர்ந்து காணாமல் போன மாணவிகளை மீட்குமாறு உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் திருச்சி மாவட்ட இரவு ரோந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 12.50 மணி அளவில் சமயபுரம் பஸ் ஸ்டாப் பகுதியில் நின்று கொண்டிருந்த 5 மாணவிகளையும் சமயபுரம் இன்ஸ்பெக்டர் வீரமணி, விசாரித்து சமயபுரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வந்தார்.அங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா அந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதாக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பவானி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இன்று சமயபுரம் வந்து 5 பள்ளி மாணவிகளையும் அழைத்துச் சென்றார். பள்ளி மாணவிகள் காணாமல் போனது சம்மந்தமாக ஈரோடு மாவட்டத்தில் இருந்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருச்சி மாவட்ட காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு மாணவிகளை மீட்டனர். அவர்களை மீட்ட சமயபுரம் இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் அவரது குழுவினரை திருச்சி எஸ்.பி. செல்வ நாகரத்தினம் மற்றும் ஈரோடு மாவட்ட எஸ் பி சுஜாதா ஆகியோர் வெகுவாக பாராட்டினர். அந்த மாணவிகளின் பெற்றோர்களும் காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Comments are closed.