Rock Fort Times
Online News

கடும் தட்டுப்பாடு நிலவுவதால் மணல் குவாரிகளை அரசு அதிகளவு திறக்க வேண்டும்…- கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார்…!

கட்டுமானம் மற்றும் மனை தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று(15-04-2025) நடைபெற்றது. கூட்டத்தில் கட்டுமான நல வாரிய தலைவர் பொன் குமார் மற்றும் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பொன் குமார், ஆற்று மணல் எடுப்பதில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளால் மணல் கிடைப்பதில் தட்டுப்பாடும் அதனால் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் அரசு மணல் குவாரிகள் திறக்க வேண்டும். அதேபோல ஆற்று மணலுக்கு மாற்றாக வந்த எம்.சாண்ட் விலையும் தற்போது அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எம்.சாண்ட் விலையை குறைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரங்கள் தொடர்பாக முதல்வரை சந்திக்க உள்ளோம். கால நிலை மாற்றத்தால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் மாவட்டத்தில் ஒரு தெருவை தேர்ந்தெடுத்து பசுமை தெருவாக மாற்ற இருக்கிறோம். குவாரிகள், கிரஷர்கள் உள்ளிட்டவற்றுக்கான வரி விதிப்பில் சில குறைபாடுகள் உள்ளது. அதை அரசு சரி செய்ய வேண்டும். இதுபோன்ற விலை உயர்வுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தீர்வு காண்பார் என்கிற நம்பிக்கை உள்ளது. கட்டுமான நலவாரியத்தில் 2011 ஆம் ஆண்டு 23 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருந்தார்கள். பத்தாண்டுகளுக்கு பின்பு 2021 ம் ஆண்டு அதன் எண்ணிக்கை 11 லட்சமாக குறைந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதால் தற்போது 13 லட்சம் பேர் புதிய உறுப்பினர்கள் சேர்ந்துள்ளார்கள். நலவாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.1,672 கோடிக்கான உதவிகள் அரசின் மூலம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
வெயிலால் நேரடியாக பாதிக்கப்படுவது கட்டுமான தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் தான். கடந்த ஆண்டு வெப்ப அலையால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் வெப்பநிலைக்கு ஏற்ப நேர கட்டுப்பாடு முறை செயல்படுத்தப்படும் என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்